Offline
பிலிப்பைன்சில் புயல், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி
News
Published on 10/26/2024

மணிலா,வடகிழக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் இசபெலா மாகாணத்தில் இன்று அதிகாலை டிராமி என்ற புயல் தாக்கியது. இந்த புயலால் ஏற்பட்ட பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் பல வீடுகள், கார்கள் நீரில் மூழ்கின. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மோட்டார் படகுகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

பெரும்பாலான இறப்புகள் மணிலாவின் தென்கிழக்கில் உள்ள 6 மாகாணங்களில் பதிவாகியுள்ளன. இதில் நாகா நகரில் மட்டும் 7 குடியிருப்பாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் சில பகுதியில் புயலுடன் கூடிய வானிலை இன்னும் நீடித்து வருவதால், நிவாரண பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலால் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேரிடர் தணிப்பு நிறுவனம் கூறியது, இதில் 75,400 கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments