ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பாலித் தீவில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் அமைக்க அந்நாடு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீண்டகாலமாகக் கிடப்பில் கிடந்த இத்திட்டத்தை அண்மையில் இந்தோனேசியாவின் அதிபராகப் பதியேற்ற பிரபோவோ சுபியாந்தோ தலைமையிலான அரசு உயிர்ப்பித்துள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என அதிபர் பிரபோவோ விரும்புவதாகவும் அதற்கான பணிகளில் அவர் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாகவும் அந்நாட்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான டிர்காயுசா செத்தியவான், அக்டோபர் 21ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இந்தப் புதிய அனைத்துலக விமான நிலையம் பாலிக்கு வடக்கே இருக்கும் புல்லென் பகுதியில் இருக்கும் குபுடம்பஹான் வட்டாரத்தில் அமையவுள்ளது. பாலியின் தலைநகரான டென்பசரிலிருந்து சுமார் இரண்டு மணிநேரத்தில் சாலை வழியாக இவ்விடத்தை அடையலாம்.
மேலும், இங்குரா ராய் அனைத்துலக விமான நிலையத்தில் தற்போது நிலவும் பயணிகள் நெரிசலை இது குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பாலித் தீவுக்குக் கிட்டத்தட்ட 15.5 மில்லியன் சுற்றுப்பயணிகள் வந்தனர். இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு கொவிட் -19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக உலகளவில் சுற்றுலா நிறுத்தப்பட்ட முந்தைய நிலைக்கு அருகில் உள்ளது.
பாலித்தீவுக்கு வடக்குப் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் தேவை என அந்நாட்டு முன்னாள் சுற்றுலா அமைச்சர் சந்தியாகா யூனோ அக்டோபர் 18ஆம் தேதி கூறினார். அப்பகுதியில் சுற்றுப்பயணிகள் அதிகம் வருகை தராத சுற்றுலாத் தளங்களுக்கு அதிகப் பார்வையாளர்கள் வர இது உதவும் என்றார் அவர்.
2016 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த விமான நிலையத் திட்டத்திற்குப் போதுமான அரசியல் ஆதரவு இல்லாததால், முன்னாள் அதிபர் ஜோக்கோவி தலைமையிலான அரசால் இதைத் தொடங்க முடியவில்லை என சந்தியாகா கூறினார்.
மேலும், “அண்மையில் நடந்த ஆட்சி மாற்றத்தால், பாலியின் வடக்குப் பகுதியில் விரைவில் அனைத்துலக விமான நிலையம் கட்டப்படும் என நான் எதிர்ப்பார்க்கிறேன்,” என்றார் அவர்.