சென்னை:
தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில், ‘யு டியூபர்’ இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என கேட்டு, மருத்துவ ஊரக நல பணிகள் துறைக்கு, போலீசார் கடிதம் எழுத்தியுள்ளனர்.
சென்னையை சேர்ந்த யு டியூபர் இர்பான் – ஆசிபா தம்பதிக்கு, ஜூலை 24ம் தேதி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சை அறையில், மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை, இர்பான் பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை, 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதேபோல, பிரசவம் பார்த்த மகப்பேறு டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இர்பான் மீது எந்த பிரிவின் கீழ், என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தெளிவுப்படுத்தும்படி, மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனரகத்திற்கு, செம்மஞ்சேரி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இர்பான் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு, ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் வந்ததும் பதில் பெறப்படும். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில், காலதாமதம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.