Offline
என்ன மனுஷன் யா!.. சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு – ரத்தன் டாடா உயில்
News
Published on 10/26/2024

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா [86] உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி காலமானார். அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவை அடுத்து டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் ரத்தன் டாடா தனது சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்று எழுதிவைத்துள்ள உயில் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ. 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் உள்ளன.

உயிலில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு வகை ‘டிட்டோ’ என்ற வளர்ப்பு நாய்க்கு தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார். மேலும் டிட்டோவை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். தவிர, சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு என்று உயிலில் ரத்தன் டாடா கூறியுள்ளார். அதேபோல் தன்னுடைய நண்பரான இளைஞர் சாந்தனு நாயுடுவுக்கு சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனையும் ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். மேலும் அவரது அறக்கட்டளை, சகோதரர், சகோதரிகள், வீட்டு பணியாளர்கள் மற்றும் பிறருக்கும் தனது சொத்தில் பங்களித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்கையும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

 

Comments