பெட்டாலிங் ஜெயா: நேற்றிரவு சுபாங் விமான நிலையத்தில் 77 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறுவதை போலீசார் மறுத்துள்ளனர். பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாஃபர் இது பல மீட்பு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பயிற்சி என்று தெளிவுபடுத்தியதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.
விமான விபத்து சம்பவங்களை கையாள ஏஜென்சிகள் தயாராக இருக்க இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். இந்தப் பயிற்சியை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மேற்பார்வையிட்டது என்று அவர் மேற்கோள் காட்டினார்.
இன்று அதிகாலை விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 67 பேர் காயமடைந்ததாகவும் செய்தி வெளியாகி வைரலானது. இந்த விபத்து நள்ளிரவு 12.41 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் ராயல் மலேசியன் விமானப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதவி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.