Offline
சபா குடிநுழைவு துறையால் 145 கள்ளக்குடியேறிகள் கைது
News
Published on 10/27/2024

ரானாவ்:

சபா குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் இன்று கம்போங் லுடுட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 145 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 82 ஆண்களும் 63 பெண்களும் அடங்குவர், அதேநேரம் அவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் முதல் 62 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று சபா குடிநுழைவு துறை இயக்குனர் டத்தோ Sh சித்தி சலேகா ஹபீப் யூசுப் தெரிவித்தார்.

“இன்று காலை 7 மணிக்கு தமது துறை சோதனை நடவடிக்கையை தொடங்கியது, சில வெளிநாட்டு பிரஜைகள் தப்பி ஓட முயன்றதால் அங்கு சிறு கைகலப்பு ஏற்பட்டது; இருப்பினும், அங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் 220 பேர் சோதனை செய்யப்பட்டதாகவும், அவர்களில் பலரிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை மற்றும் நாட்டில் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட அதிக காலம் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

குடியேற்றச் சட்டம் 1959/63, பாஸ்போர்ட் சட்டம் 1966, மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963, அத்துடன் ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

 

 

Comments