Offline
இந்தோனேசியாவில் ஐஃபோன் 16ஐப் பயன்படுத்தலாம், ஆனால் விற்கக்கூடாது!
News
Published on 10/29/2024

ஜகார்த்தா:

இந்தோனேசியாவுக்குள் வரும் சுற்றுப்பயணிகள் தங்கள் ஐஃபோன் 16 (IPhone 16) திறன்பேசியைக் கொண்டு வரலாம், ஆனால் அவற்றை விற்க அனுமதி கிடையாது என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சு கூறியுள்ளது.

அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், கடந்த செப்டம்பர் மாதம் ஐஃபோன் 16ஐ வெளியிட்டது. ஆப்பிள், இந்தோனேசியாவின் உள்நாட்டு முதலீட்டு இலக்குகளைப் பூர்த்தி செய்யவில்லை. அதனால் ஐஃபோன் 16ஐ இந்தோனேசியாவில் விற்க அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும், சொந்தப் பயன்பாட்டுக்காக ஐஃபோன் 16ஐப் பயன்படுத்துவோர் அதை இந்தோனேசியாவுக்குள் கொண்டு வரலாம். மேலும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக அஞ்சல்வழி ஐஃபோன் 16 திறன்பேசிகளைத் தருவிக்கவும் அனுமதி உண்டு என ஜகார்த்தா குளோப் (Jakarta Globe) ஊடகம் தெரிவித்தது. உள்ளூர் முதலீட்டு இலக்கை பூர்த்தி செய்ய ஐஃபோன் தருவிப்பு தேவையில்லாததே அதற்குக் காரணம் என்று அது தெரிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு பயணியும் இரண்டு ஐஃபோன் 16 திறன்பேசிகளை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதி இருப்பதாகவும் ஜகார்த்தா குளோப் குறிப்பிட்டது.

கடந்த ஆகஸ்ட் முதல் இம்மாதம் வரை சுமார் 9,000 ஐஃபோன் 16 திறன்பேசிகளைப் பயணிகள் இந்தோனேசியாவுக்குள் கொண்டு வந்தனர். அவற்றுக்கான வரியும் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவற்றை இந்தோனேசியாவுக்குள் விற்க முயற்சி செய்வது சட்டவிரோதச் செயலாகக் கருதப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Comments