Offline
ஐதராபாத்தில் பட்டாசு கடையில் வெடிவிபத்து: 8 பைக் எரிந்து நாசம்
News
Published on 10/29/2024

திருப்பதி:ஐதராபாத் அபிட்ஸ் பகுதியில் மொத்த பட்டாசு விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து பட்டாசுகள் வெடித்து சிதற தொடங்கின.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். தீ வேகமாக பரவியதால் கடையில் இருந்த பட்டாசுகள் நாலாபுரமும் வெடித்து சிதறின.

வான வேடிக்கையை மிஞ்சும் அளவிற்கு அங்கிருந்த பட்டாசுகள் விண்ணில் பறந்து வெடித்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடைவிடாமல் பட்டாசுகள் வெடித்து சிதறி கொண்டே இருந்தன. இதனால் பட்டாசு கடை அருகில் இருந்த ஒரு ஓட்டல் கட்டிடத்தில் தீ பரவியது.

அந்த கட்டிடம் முழுவதும் எரிய தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேறினர்.

கடையின் முன்பு இருந்த கார்கள் பைக்குகளிலும் பட்டாசுகள் விழுந்ததில் தீப்பற்றின. இதில் கடையில் அருகில் இருந்து 10 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமானது. பெண் ஒருவர் காயமடைந்தார்.

யாருமே அருகே செல்ல முடியாத அளவுக்கு பட்டாசுகள் வெடித்து சிதறிக் கொண்டே இருந்தன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அருகில் உள்ள கட்டிடங்களில் தீ பரவாமல் தடுப்பதில் முழு கவனம் செலுத்தினர். பட்டாசு வெடித்துக்கொண்டே இருந்ததால் கடையை அவர்களால் நெருங்க முடியவில்லை.

பட்டாசுகளின் முழுவதும் வெடித்து சிதறிய பிறகு பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவத்தால் ஐதராபாத் நகர பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் என்னும் தெரியவில்லை. பட்டாசு கடை அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments