ஜோகூர் பாரு:
சிங்கப்பூரில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த மலேசியர் தற்போது ஜோகூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த அக்டோபர் 17 நடந்த விபத்துக்குப் பிறகு சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் (NUH) தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த 28 வயதான அகிஃப் -ஜார் உகஸ்யா என்பவரது மருத்துவ செலவுக்கு, பொதுமக்கள் மொத்தம் S$110,537 (RM364,466)-க்கு நிதி திரட்டிக் கொடுத்த பின்னர், அவர் மலேசியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டார்.
“உங்கள் பங்களிப்புகளுக்கும் உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் நன்றி. என் மகன் வீட்டில் இருக்கிறான், இப்போது சுல்தானா அமினா மருத்துவமனையில் (HSA) சிகிச்சை பெற்று வருகிறான்” என்று அகிஃப்பின் தாயார் கு அமேசான் துவான் யூசோப் கூறினார்.
அகிஃப்பின் மொத்த பில்லில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை பொதுமக்கள் திரட்ட முடிந்தது, அதே நேரத்தில் எஞ்சிய மருத்துவக் கட்டணத்தை அவரது சிங்கப்பூர் முதலாளி செலுத்துவதாகக் கூறினார் என்றும் அவரின் தாயார் தெரிவித்தார்.
மேலும் அகிஃப்பின் முதுகுத்தண்டில் கடுமையான காயங்கள், இடது கை முறிவு மற்றும் நுரையீரல் காயங்களால் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அகிஃப் மீண்டும் நடக்க சிறிது நேரம் ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறியதாக அவர் கூறினார்.