கோலாலம்பூர்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஒரு மலேசியர் என்று ஃபாக்ஸ் நியூசின் முன்னாள் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சன் தவறாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான் நகைச்சுவை உணர்வுடன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 30ஆம் தேதியன்று ஒரு பதிவை வெளியிட்டார்.
“அமெரிக்க அதிபர் தேர்தலில் மலேசியர் ஒருவர் போட்டியிடுகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. இதை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி திரு கார்ல்சன். தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை மலேசியாவுக்கு வரவழைக்கிறோம். அவர் ‘சொந்த நாடு’ திரும்பி மலேசியாவின் நாசி கோரிங்கைச் சுவைக்கலாம்,” என்று அவர் அப்பதிவில் தெரிவித்தார்.
அக்டோபர் 28ஆம் தேதியன்று நியூயார்க்கில் டோனல்ட் டிரம்ப் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட கார்சன், கமலா ஹாரிசை ‘சமோவா மலேசியர்’ என்று தவறாகக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.