ஜார்ஜ்டவுன்:
RM640,000 மதிப்புள்ள சீன டீ பேக்கேஜிங்கில் அடைக்கப்பட்ட 20 கிலோகிராம் சியாபுவை பினாங்கு போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பில் ஒரு பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளது.
நேற்று மாலை 4 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாகவும், 25 முதல் 39 வயதுடைய சந்தேக நபர்கள் சியாபு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாகவும் பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அமாட் தெரிவித்தார்.
முதல் சோதனையில், பட்டர்வொர்த்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர் என்றும், அதேநேரம் அவர்களிடமிருந்து 1.036 கிலோ சியாபு அடங்கிய நீல துணி பையை கைப்பற்றியதாகவும் அவர் சொன்னார்.
“அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு வீட்டில் மற்றொரு நபரை போலீசார் பிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டதன் மூலம் அவர் பட்டர்வொர்த் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சியாபுவையும் போலீசார் கைப்பற்றினர் என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சோதனையின் போது, RM48,000 மதிப்புள்ள BMW கார் மற்றும் RM17,686 மதிப்புள்ள பல்வேறு நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட சியாபுவை 100,000 போதை பித்தர்கள் அல்லது 100,000 முறை பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
மூன்று சந்தேக நபர்களின் சிறுநீர் பரிசோதனை முடிவுகள் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக வந்தன, ஆனால் அவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான பல முந்தைய குற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக நவம்பர் 3 வரை ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.