கடந்த வாரம் பினாங்கில் தனது காரை கொண்டு இரண்டு போலீஸ்காரர்களை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்தாக சர்வேயர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இன்று ஜார்ஜ் டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஜுரைதா அப்பாஸ் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதை அடுத்து, அம்மார் ஃபரிஸ் ஜைனுல்கிஃப்ளி 31, குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
மாஸ் சஃபிக் அஜிசான் மட்ஸ்ரோல் மற்றும் நார்ஹாஸ்மி அப் ரசாக் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது ஹோண்டா சிவிக் மூலம் அவர்களைக் கொலை செய்ய முயன்றதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு ஜார்ஜ் டவுன், ஜாலான் கெலவாய் மீது கர்னி பிளாசாவிற்கு பின்னால் குற்றத்தைச் செய்ததாக அம்மார் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கும் தண்டனைச் சட்டம் பிரிவு 307இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
துணை அரசு வக்கீல் லீ ஜுன் கியோங் 12,000 ரிங்கிட் ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். ஆனால் அம்மார் தான் 1,200 ரிங்கிட் மட்டுமே சம்பாதித்ததாகவும், வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட தனது தாயை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி குறைந்த தொகைக்கு வாதிட்டார். நீதிபதி அம்மாருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் 7,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க அனுமதித்ததோடு நவம்பர் 20 ஆம் தேதி வழக்கிற்கான தேதியை நிர்ணயித்தார்