Offline
குடிக்க தண்ணீர் கேட்டவரை ஆசிட் குடிக்க வைத்த உ.பி. போலீஸார்
News
Published on 11/01/2024

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட தர்மேந்திர சிங் என்ற இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, போலீஸார் அவரை ஆசிட் குடிக்க வைத்ததால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தர்மேந்திர சிங்கின் சகோதரர், “அக்டோபர் 14 அன்று 2 தரப்பினர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அந்த சண்டையை தர்மேந்திர சிங் தடுக்க சென்றார். ஆனால் போலீஸார் தர்மேந்திர சிங்கை கைது செய்தனர். போலீஸ் லாக்-அப்பில் தர்மேந்திரா தண்ணீர் கேட்டபோது, போதையில் இருந்த போலீஸார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதனால் எனது சகோதரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆசிட் குடிக்க வைப்பதற்கு முன்பு தர்மேந்திர சிங்கை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

லக்னோவில் போலீஸ் காவலில் மோகித் பாண்டே என்ற நபர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments