Offline
இருக்கைக்காக நடந்த மோதல்.. ஓடும் ரெயிலில் பயணியை கொடூரமாக கொன்ற கும்பல்
Published on 12/07/2024 00:48
News

அமேதி:ஜம்முவில் இருந்து வாரணாசி நோக்கி பேகம்புரா எக்ஸ்பிரஸ் இன்று வந்துகொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணித்த தவுகித் என்ற 24 வயது வாலிபருக்கும், சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தவுகித்தை இரும்பு கம்பி, கத்தி ஆகிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். லக்னோ-நிகல்கர் ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-அமேதியின் மதேரிக்கா பகுதியைச் சேர்ந்த தவுகித், அம்பாலா சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது அவருக்கும் சுல்தான்பூர் மாவட்டம் கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மோதலாக மாறியது. இளைஞர்கள் தவுகித்தை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் நிலைகுலைந்து சரிந்த தவுகித் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு, தனது குடும்பத்தினரை தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்த நிலையை கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன தவுகித்தின் சகோதரர்கள் தாலிப் (வயது 20), தவுசிப் (வயது 27) ஆகிய இருவரும் நிகல்கர் ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர். அவர்கள் வந்ததும் அவர்களையும் அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குற்றவாளிகள் சுல்தான்பூர் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

Comments