Offline
Menu
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: டிச.16ல் மீண்டும் துவங்குகிறது கனமழை
Published on 12/15/2024 13:36
News

வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் டிச.16 முதல் மீண்டும் கனமழை துவங்கும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை 8:30 வரையிலான 24 மணி நேரத்தில் 29 இடங்களில் அதிகன மழையும், 81 இடங்களில் மிக கன மழையும், 168 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

மேலும் இலங்கையின் மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று நிலவரப்படி லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தில் அதே பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது படிப்படியாக வலுவடைந்து மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களை நெருக்க வாய்ப்புள்ளது. இதனால் டிச.,16 முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை துவங்கக்கூடும் என்றும், மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments