நியூயார்க்:
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மிகப் பெரும் நிறுவனமான ஓபன் ஏ.ஐ., மோசடி செய்வதாக பகிரங்கமாக புகார் தெரிவித்த, இந்தியாவை பூர்வீகமாக உடைய மென்பொருள் இன்ஜினியரான சுசிர் பாலாஜி, 26, அவரது வீட்டில் தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்தும், உலகின் மிகப் பெரும் நிறுவனமாக, அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, சாட் ஜி.பி.டி., உட்பட பல புதிய தகவல் பரிமாற்ற முறைகளை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர், இந்திய வம்சாவளியான சுசிர் பாலாஜி. இவர், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வாயிலாக, பல புதிய வகை தகவல் பரிமாற்ற முறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், கடந்த அக்., மாதம் அவர், நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்; ஓபன் ஏ.ஐ., நிறுவனம் மிகப் பெரும் மோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக, ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு சுசிர் பாலாஜி பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தன் வீட்டில் அவர் தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவ., 26ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அவருடன் தொடர்பு கொள்ள முடியாததால், நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவருடைய வீட்டில் சோதனையிட்டனர்.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். உடலில் காயங்கள் ஏதுமில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்துக்கு எதிராக பகிரங்கமாக புகார் தெரிவித்த நான்கு மாதங்களில், சுசிர் பாலாஜி தற்கொலை செய்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.