Offline
Menu
மொசாம்பிக்கை தாக்கிய சூறாவளி; 34 பேர் பலி
Published on 12/18/2024 18:00
News

மபுதோ,மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சூறாவளியால் மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். 319 பேர் காயமடைந்து உள்ளனர். சூறாவளியால், 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆபத்து மேலாண்மை மற்றும் குறைப்புக்கான தலைவர் லூயிசா மெக் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்று கிழமையன்று, கபோ டெல்கடோ மாகாணத்தில் உள்ள மெகுபி மாவட்டத்தில் சூறாவளி கரையை கடந்தது. தொடர்ந்து, திங்கட்கிழமையும் சூறாவளி தாக்கம் இருந்தது. கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன.

சூறாவளியால் இதுவரை 23,600 வீடுகள் மற்றும் 170 மீன்பிடி படகுகள் சேதமடைந்து உள்ளன. சூறாவளி, ஜிம்பாப்வே அருகே நேற்று மாலை வலுவிழக்கும் என கூறப்பட்டது. சூறாவளியால் ஜிம்பாப்வே நாடும் பாதிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அந்நாடு தீவிரப்படுத்தி உள்ளது.

Comments