லாஸ் ஏஞ்சல்ஸ்: பெற்றோரைக் கொன்றதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த லைல் மற்றும் எரிக் மெனெண்டஸ் சகோதரர்களின் ஆயுள் தண்டனையை மே 14 அன்று நீதிபதி குறைத்ததால், அவர்கள் விரைவில் விடுதலை ஆகலாம். 1989 இரட்டை கொலைக்கு முழு பொறுப்பேற்றுக் கொண்ட சகோதரர்கள், 35 ஆண்டுகள் சிறையில் கழித்ததற்காக விடுதலை பெற தகுதியுடையவர்கள் என்று நீதிபதி மைக்கேல் ஜெசிக் தீர்ப்பளித்தார். அவர்களின் ஆயுள் தண்டனை 50 ஆண்டுகள் வரை குறைக்கப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள விசாரணையில் அவர்கள் பரோலுக்கு விண்ணப்பிக்கலாம்.
கிம் கர்தாஷியன் போன்ற பிரபலங்களின் ஆதரவுடன் நடைபெற்ற பொது பிரச்சாரம் மற்றும் நெட்ஃபிக்ஸ் தொடர் மூலம் இந்த வழக்கு மீண்டும் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் மாஃபியா மீது குற்றம் சாட்டிய சகோதரர்கள், பின்னர் தந்தை பல ஆண்டுகளாக உணர்ச்சி மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் தற்காப்புக்காக கொலை செய்ததாகக் கூறினர். நீதிமன்றத்தில் ஆஜரான லைல் மற்றும் எரிக் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களின் குடும்பத்தினர் கருணை காட்டும்படி நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும், மாவட்ட வழக்கறிஞர் நாதன் ஹோச்மேன் மறு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அடுத்த மாதம் பரோல் வாரியத்தின் விசாரணைக்குப் பிறகு, கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூஸோம் இறுதி முடிவை எடுப்பார்.