மாஸ்கோ:
பசிபிக் பெருங்கடல் அருகே உள்ள ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் இன்று திடீரென்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் வீடுகள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வெளியே வந்த நிலையில் ரஷ்யா மற்றும் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பசிபிக் பெருங்கடலையொட்டி நகரமாக பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி உள்ளது. இந்த நகரம் பசிபிக் பெருங்கடலில் அவாச்சா விரிகுடாவின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று அந்த நகரில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.6 முதல் 7.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களாக பதிவாகின. இதனால் வீடுகள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. நிலநடுக்கத்தால் பயந்துபோன மக்கள் அலறியடித்து கொண்டு தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர்.
அப்போதும் நிலநடுக்கம் நிற்கவில்லை. விட்டு விட்டு நிலஅதிர்வு ஏற்பட்டது. ஒரு மணிநேரத்தில் தொடர்ந்து 5 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் செல்லவில்லை. அச்சத்துடனே வெளியே நின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீட்டில் பொருட்கள் கீழே விழுந்தது மற்றும் வீட்டில் இருந்து மக்கள் வெளியே ஓடிவந்தது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
தஜிகிஸ்தானில் ஷாக் ஜெர்மன் ஜியோ சயின்ஸ் ஆய்வு மையம் சார்பில் நிலநடுக்கத்தின் அளவு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் ஐரோப்பிய ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்,மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) ஆகியவை நிலநடுக்கங்களை பதிவு செய்தனர் அதன்படி ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரின் கிழக்கு பகுதியில் 147 கிலோமீட்டர் தூரத்தில் முதலில் 6.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு அந்த நகருக்கு கிழக்கே 151 கிலோமீட்டரில் 6.7 ரிக்டரிலும், பிறகு பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகருக்கு கிழக்கே 144 கிலோமீட்டர் தொலைவில் 7.4 ரிக்டரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.பிறகு பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகருக்கு கிழக்கே 130 கிலோமீட்டரில் 6.7 ரிக்டரிலும், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகருக்கு 142 கிலோமீட்டர் கிழக்கே 7 கிலோமீட்டரிலும் நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தது.