சென்னை,தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதை நாய் பிரியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். இன்று திருச்சி மற்றும் சென்னையில் இந்த முடிவை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த பேரணியில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு ராமச்சந்திரன், இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில் இயக்குநர் வசந்த் பேசியதாவது “உயிர்களிடம் அன்பு காட்டு என வள்ளலார் கூறினார். மனிதர்களுக்கானது மட்டுமே இல்லை இந்த பிரபஞ்சம். எல்லாம் உயிர்களுக்கும் சமமானது. அந்த கண்ணோட்டத்தில் இதை நாம் அணுக வேண்டும். டெல்லியில் தினமும் கற்பழிப்பு சம்பவங்கள் 67 நடக்கிறது, கொலை சம்பவங்கள் 80 நடக்கிறது, சாலை விபத்தில் இறப்பு 462 நடக்கிறது. நாய்கள் கடித்து இறக்கும் சதவீதம் 0.15 மட்டுமே. இதை வாக்குவாதமாக முன்வைக்கவில்லை தெருநாய்க்களை தெரு நாய்கள் என கூறுவதே தவறு. அதனை அடைத்து வைப்பது அனைத்திர்க்கும் தீர்வல்ல” என கூறியுள்ளார்.