கோலாலம்பூர்
வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சகம் (KPKT) பிரச்சினைக்குரிய வணிகத் திட்டங்களின் மீதான நடவடிக்கையின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்காக, வீட்டுவசதி மேம்பாட்டு (கட்டுப்பாடு மற்றும் உரிமம்) சட்டம் 1966 (சட்டம் 118) இல் முன்மொழியப்பட்ட திருத்தங்களை ஆராய்ந்து வருகிறது.
இந்தத் திருத்தங்கள், டெவலப்பர் நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களின் வாரிய உறுப்பினர்களை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது உட்பட, அமலாக்கத்தை மிகவும் திறம்பட மற்றும் விரிவாக மேற்கொள்ள உறுதி செய்யும்.
இது தீங்கு விளைவிக்கும் திட்டங்களை முன்னரே கையாள்வதற்கான தீர்வாகும் என அமைச்சர் Nga Kor Ming இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டப்பிரிவில் ஏற்படவுள்ள மாற்றங்கள் கட்டட திட்டங்களை பாதிப்பவர்களை மட்டும் அல்ல, அந்த பாதிப்பின் பின்னணியில் உள்ளவர்களையும் கையாள உதவும் . இதன்வழி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் தெளிவான சட்ட நடைமுறை அமையும் என்றார் அவர்.
இதுகுறித்து KPKT, சட்ட நிர்வாகம், தொழில்துறையினர் மற்றும் பயனர் பிரதிநிதிகள் உடன் கலந்தாலோசனைகளை முன்னெடுக்கும். இதன் மூலம் புதிய சட்டங்கள் முழுமையாகவும், பொருத்தமானதும், உயர் தாக்கமுள்ளவுமாக இருக்கும் என்றார் அமைச்சர்.