ஜார்ஜ் டவுன்,
பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில், போலீஸ் ஐந்து பேரை கைது செய்ததுடன், சுமார் 46 கிலோ எடையிலான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு RM142,600 என மதிப்பிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாவட்ட குற்றப்பிரிவு நார்கோட்டிக் பிரிவு நடத்திய சோதனையில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு டொயோட்டா ஆல்ஃபார்ட் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என பினாங்கு போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்,.
சோதனையில் 30 மற்றும் 14 கட்டுகளாக அடுக்கப்பட்டிருந்த உலர்ந்த கஞ்சா தாவரங்கள் முறையே 29,948 கிராம் மற்றும் 16,179 கிராம் எடையுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
அதே சமயம், போலீசார் ஒரு பெரோடுவா பெஸ்ஸா மற்றும் ஹோண்டா அகார்டு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தமாக கைப்பற்றப்பட்ட மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு RM189,600 ஆகும்.
இந்தக் கும்பல் கடந்த பிப்ரவரி மாதம் முதலே செயல்பட்டு வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 92,000 பேரால் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய அளவிலுள்ளது என போலீஸ் தெரிவித்துள்ளது..
கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் கஞ்சா (THC) மற்றும் ஒருவர் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு நேர்மறையானதாக இருந்ததாக சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், இருவர் முன்னதாக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு பதிவுகள் கொண்டவர்கள் எனவும் கூறப்பட்டது.
ஐந்து பேரும் ஆகஸ்ட் 22 வரை ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (Seksyen 39B) பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.