Offline
Menu
ஒடிசாவில் புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு – 20,000 கிலோ கிடைக்கும் சாத்தியம்
By Administrator
Published on 08/20/2025 09:00
News

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களில் புதிய தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) தெரிவித்துள்ளது. இச்சுரங்கங்களில் இருந்து சுமார் 20,000 கிலோ தங்கம் எடுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் தங்கச் சுரங்கங்கள் இருக்கலாம் என நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த நிலையில், ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபாரங்பூர், கியோன்ஜார், அங்குல் உள்ளிட்ட மாவட்டங்களில் புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் தங்கத் தாதுக்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, மயூர்பன்ஞ், மல்கன்கிரி, சாம்பல்பூர், பவுத் போன்ற பகுதிகளில் சுரங்கத் தோண்டுதல் மற்றும் தங்கம் வெட்டியெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக மாநில சுரங்கத் துறை அமைச்சர் விபூதி பூஷண் ஜெனா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஆனால் எவ்வளவு தங்கத்தை எடுக்க முடியும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடு இன்னும் வெளியாகவில்லை. 20,000 கிலோ என்பது வெறும் ஆரம்பக் கணிப்பே என்றும், அது இந்தியாவின் உள்நாட்டு தேவையை நிறைவேற்ற இயலாது என்றும் நிபுணர்கள் விளக்குகின்றனர். எனினும், இந்த கண்டுபிடிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாயிலாக அமையும் என்று கருதப்படுகிறது.

தற்போது ஒடிசா மாநிலம் பல்வேறு கனிமங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் தங்க உற்பத்தியும் சேருமானால், கனிம ஏற்றுமதியில் ஒடிசா முக்கிய பங்காற்றும் மாநிலமாக உருவெடுக்கலாம்.

குறிப்பாக, கர்நாடகாவின் கோலார் தங்கச் சுரங்கத்தில் கடந்த 121 ஆண்டுகளில் 10 லட்சம் கிலோ தங்கம் எடுக்கப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா வெளிநாடுகளில் இருந்து சுமார் 8 லட்சம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Comments