வாஷிங்டன்,இங்கிலாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்ற கதாபாத்திரம். ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு ‘007’ என்ற குறியீடும் வழங்கப்பட்டது.
இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார். இந்த கதாபாத்திரத்தை வைத்து முதல் முதலாக 1962 ஆம் ஆண்டு ‘டாக்டர் நோ’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. சீன் கானரி முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார்.
அன்று முதல் கடைசியாக கடந்த 2021-ல் வெளியான ‘நோ டைம் டு டை’ திரைப்படம் வரை, மொத்தம் 27 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வரிசை திரைப்படங்களுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு ‘007’ என்ற குறியீட்டு எண் தனித்துவமான அடையாளத்தை கொடுத்தது. இதில் ‘7’ என்ற எண் துப்பாக்கி போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். உலகப் புகழ் பெற்ற இந்த குறியீட்டை வடிவமைத்தவர் பிரபல கிராபிக் டிசைனர் ஜோ கேராப். இவர் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களின் போஸ்டர்களை வடிவமைத்துள்ளார்.
பழம்பெரும் ஹாலிவுட் இயக்குநர்களான மார்ட்டின் ஸ்கார்செசி, ரிச்சர்டு அட்டன்பரோ, வுடி ஆலன் உள்ளிட்டோரின் திரைப்படங்களுக்கு தனித்துவமான டைட்டில் போஸ்டர்களை இவர் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். குறிப்பாக 1982-ம் ஆண்டு வெளியான ‘காந்தி’ திரைப்படத்தின் போஸ்டரையும் ஜோ கேராப் வடிவமைத்திருந்தார்.
‘007’ துப்பாக்கி லோகோவை வடிவமைத்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஜோ கேராப், “7 என்ற எண்ணை பார்க்கும்போது அதை ஒரு துப்பாக்கியின் கைப்பிடி போல் மாற்றலாம் என்ற எண்ணம் தோன்றியது. உடனடியாக அந்த டிசைனை வடிவமைத்தேன். அதில் எந்த கஷ்டமும் இருக்கவில்லை. அந்த டிசைனுக்காக எனக்கு 300 டாலர் சம்பளம் கிடைத்தது. அதன் பிறகு எனக்கு நிறைய வேலைகள் வர ஆரம்பித்தன” என்று கூறியுள்ளார்.
ஒய்வுக்கு பிறகு அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், 103 வயதான ஜோ கேராப், கடந்த 17-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 1962-ம் ஆண்டு அவர் வடிவமைத்த துப்பாக்கி லோகோ, அடுத்தடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கான காப்புரிமை தொகை எதுவும் ஜோ கேராப்புக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.