ஈப்போ:
காமுண்டிங் அருகே வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் (PLUS) வடக்குப் பாதையின் கி.மீ 198.1 பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், முட்டைகளை ஏற்றிச் சென்ற லோரி, தர்பூசணி ஏற்றிச் சென்ற மற்றொரு லோரியின் பின்புறம் மோதியதில் முட்டை லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக காலை 5.18 மணிக்கு அழைப்பு வந்ததும், 16 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என்று, பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல் துணை இயக்குநர் ஷஸ்லீன் முகமட் ஹனாபியா தெரிவித்தார்.
32 வயதான முட்டை லோரி ஓட்டுநர் மீட்கப்பட்டபின், சுகாதார அமைச்சின் மருத்துவ குழுவினரால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார் என்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கை காலை 6.52 மணிக்கு நிறைவடைந்தது என்று அவர் மேலும் கூறினார்.