கோலாலம்பூர்:
இந்திய சமூகத்தை புறக்கணிப்பதாக கருதப்படுவது தவறானது, மித்ரா அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் சேர்ந்து, சமூகத்தின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது எடுத்துக்காட்டுகளின் படி, 2022 முதல் அரசு முன்வைத்த முன்னெடுப்புகளில், சும்பாங்கன் துனாய் ரஹ்மா (STR) திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்திற்கு RM500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, அந்த ஒதுக்கீடு RM972 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் “இந்திய சமூகத்தின் அனைத்து நலனும் மித்ரா வழிதான் வழங்கப்படுகிறதென சொல்வைத்து பொருத்தமற்றது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், இந்திய சமூகத்தின் சமூக- பொருளாதார முன்னேற்றத்திற்கு மித்ரா மற்றும் பிற நிறுவனங்கள் எவ்வாறு கவனம் செலுத்துகின்றன என்று கேட்ட போது பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், Housing Credit Guarantee திட்டத்தின் பெரும்பாலான பயனாளர்கள் பூமிபுத்ரா என்றாலும், இந்திய சமூகத்தைத் தவிர்க்கவில்லை என்றும், குறிப்பாக இந்திய சமூகத்துக்காக RM1.2 மில்லியன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் இந்திய சமூகத்தின் நலன்கள் வலுவாக முன்னேற்றப்படுவதாகவும், அரசாங்கம் சமநிலை, சமத்துவ முறையில் அனைத்து சமூகங்களுக்கும் உதவி வழங்குகிறது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.