கோலாலம்பூர்:
தலைநகரின் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி, 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளுகிறது.
KL Sentral, மஸ்ஜித் ஜாமெக், பாசார் சினி மற்றும் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் ஆகிய இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. காவல் துறை ரோந்து பணிகளுடன் சேர்த்து, நவீன கண்காணிப்பு அமைப்புகளும் நிறுவப்படும் என்று, நகர காவல் துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
“தொடர்ச்சியான கண்காணிப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பது பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்டம் மற்றும் ஒழுங்கையும் சிறப்பாக உறுதி செய்ய உதவும்,” என்று அவர் இன்று KL Sentral-ல் ஆய்வு செய்தபோது கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது நகரின் சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கவரேஜ் விரைவில் விரிவுபடுத்தப்பட்டு, எதிர்கால தேவைகளுக்கேற்ப மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
KL Sentral, கிள்ளான் பள்ளத்தாக்கின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர், காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை உச்ச நேரங்களில் தினமும் 20 லட்சம் மக்கள் இங்கு பயன்படுத்துவதால், பாதுகாப்பு முன்னுரிமையாக வலுப்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.