Offline
இவ்வாண்டில் மட்டும் 49,082 மோசடி பதிவுகள் அகற்றம்
By Administrator
Published on 08/20/2025 09:00
News

கோலாலம்பூர்:

இவ்வாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, இணையத்தில் இருந்து மொத்தம் 49,082 மோசடி தொடர்பான பதிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு 63,652 பதிவுகள் அகற்றப்பட்டன; அதற்கு முந்திய 2023ஆம் ஆண்டில் 6,297 பதிவுகள் மட்டும் நீக்கப்பட்டன. போலிக் கணக்குகள், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடி பதிவுகள் பரவல் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சரவாக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற தொடர்பு அமைச்சின் உன்னத சேவை விருது விழாவில் உரையாற்றியபோது, இந்த புள்ளிவிவரங்களை அவர் வெளியிட்டார்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, அனைத்துத் தரப்பினரும் தங்களைத் தகுக்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “ஏஐ பல்வேறு பணிகளையும் அன்றாட வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. ஆனால் முயற்சி, அர்ப்பணிப்பு, மேன்மையான சேவை போன்ற அடிப்படை விழுமியங்களை அது மாற்ற முடியாது. அவையே பொதுச் சேவையின் அடித்தளம்,” என்று தியோ சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும், தொழில்நுட்பத்தை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துவது அவசியம் என்றும், மோசடிகள் மற்றும் போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அவ்வகையில், ‘அய்ஃபா’ (AI-FA) என்ற செயற்கை நுண்ணறிவு உண்மைச் சரிபார்ப்பு சேட்பாட் இவ்வாண்டு ஜனவரி 28ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலை 31ஆம் தேதி வரை, அந்தச் சேவைக்கு சராசரியாக தினமும் 769 குறுஞ்செய்திகள் என மொத்தம் 142,257 குறுஞ்செய்திகள் வந்ததாக அவர் கூறினார்.

Comments