வாஷிங்டன்:
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவை வெள்ளை மாளிகை பேச்சாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், “இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க மக்கள் அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு கூடுதல் வரி உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
அவர் மேலும், அண்மையில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் மோதலை சமரச பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தது டிரம்பின் முக்கிய வெற்றி எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாதிருந்தால் அது அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்திருக்க வாய்ப்பிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், வர்த்தக பிரச்சினைகளை தீர்ப்பதையே முன்னுரிமையாகக் கொண்டு டிரம்ப் இந்த மோதலை சமரசமாக முடித்ததாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா கண்டித்திருந்தது. ரஷ்யா உக்ரைன்மீது நடத்திவரும் போருக்கு, எண்ணெய் வாங்குதல் மூலம் இந்தியா நிதியளிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதித்து வந்த அமெரிக்க அரசு, ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் மேலும் 25% உயர்த்தி மொத்தம் 50% வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும், இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதை தொடரும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது