கோலாலம்பூர்:
நகரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட உள்ளதாக உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சர் ஙா கோர் மிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த, தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்கள் அவசியம் என்றும் அதற்கான விரிவான விளக்கத்தை இன்று நாடாளுமன்றத்தில் அளித்தார்.
“நகரங்களை புதுப்பிப்பது என்பது மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற பொருளல்ல; மாறாக, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் அருகிலேயே அமைக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமைச்சர் உறுதியளித்தார்.
30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய கட்டிடங்கள் முதலில் அடையாளம் காணப்பட்டு புதுப்பிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நகரங்களில் உள்ள 50% கட்டிடங்கள் நிதி நெருக்கடியால் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால், அவற்றின் உரிமையாளர்களுக்கு கட்டிடத்தை நிறைவு செய்ய அரசாங்கம் உத்தரவு வழங்கும். உரிமையாளர்கள் இணங்க மறுத்தால், அந்தக் கட்டிடங்களை அரசு முழுமையாகக் கட்டி முடித்து, அரசு அலுவலகங்களாக அல்லது பொதுமக்கள் சேவை மையங்களாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ஙா கோர் மிங் விளக்கமளித்தார்.