வாஷிங்டன்:
அமெரிக்கா, வர்த்தகத் தேவைகளுக்காக வெளிநாட்டு லோரி ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை அனுமதி விசாக்களை உடனடியாக நிறுத்தும் முடிவை அறிவித்துள்ளது. இந்த முடிவை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ருபியோ வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அறிவித்தார்.
“அமெரிக்காவில் கனரக லோரிகளை ஓட்டும் வெளிநாட்டு ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அமெரிக்க லோரி ஓட்டுநர்களின் வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது,” என்று ருபியோ X சமூக ஊடக தளத்தில் பதிவிட்டார்.
ஆங்கிலம் பேசத் தெரியாத வெளிநாட்டு லோரி ஓட்டுநர்கள் குறித்த அதிகரித்த புகார்களைத் தீர்க்கும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், வர்த்தகப் பயன்பாட்டுக்காக லோரிகளை இயக்கும் வெளிநாட்டு ஓட்டுநர்கள் ஆங்கில மொழித் திறன் தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
சமீபத்தில், ஃபுளோரிடா மாநில விரைவுச்சாலையில் நடந்த சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர். அந்த விபத்தில் சிக்கிய லோரி ஓட்டுநர் இந்தியாவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் பேசத் தெரியாததோடு, அமெரிக்காவில் இருக்க தேவையான உரிமம் இல்லாமலும் அவர் லோரி ஓட்டி வந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அந்த ஓட்டுநர், ஹர்ஜிந்தர் சிங், வாகனத்தை ஆயுதமாக பயன்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.