Offline
தேசிய தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தாண்டு RM19.09 மில்லியன் ஒதுக்கீடு- துனை கல்வி அமைச்சர்
By Administrator
Published on 08/24/2025 15:44
News

கோலாலம்பூர் :

நாட்டிலுள்ள தேசிய தமிழ்ப் பள்ளிகளுக்கு (SJKT) RM19.09 மில்லியனை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.

சென்ற ஆண்டு (2024) ஒதுக்கப்பட்ட தொகையைவிட இவ்வாண்டு கூடுதலாய்க் கொடுக்கப்படுவதாக

கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ கூறினார்.

போன ஆண்டு நாடு முழுதும் உள்ள பள்ளிகளுக்கு 18.15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

“பேராக் மாநிலத்திற்கு மட்டும் இவ்வாண்டு 4.43 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தரப்பட்ட 4.13 மில்லியன் ரிங்கிட்டைக் காட்டிலும் அது அதிகம். தேவையான பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகளுக்குப் பள்ளிகள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் வோங்.

நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஈப்போவில் உள்ள கிந்தா உத்தாரா மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசினார்.

முன்னதாக, அந்த மாவட்டத்தில் உள்ள எட்டுத் தமிழ்ப் பள்ளிகளுக்கு 810,000 ரிங்கிட்டைத் வோங் வழங்கினார்.

பள்ளிகளின் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பு வசதிகளுடன் மெருகேற்ற வேண்டும் என்பதில் அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டைக் கூடுதல் நிதி ஒதுக்கீடு பிரதிபலிப்பதாக வோங் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடவேண்டிய தேவையில்லை என்றும் அவர் சொன்னார். கல்வித் தேவைகளைத் தொடர்ந்து நிறைவேற்றிவருவதால் அந்தப் பள்ளிகள் சமூகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன என்றார் அவர்.

அத்தகைய பள்ளிகள் தொடர்ந்து காலத்திற்கு ஏற்றவாறு செயல்படுவதை உறுதிசெய்யப் பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments