புனோல்,ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்டு இறுதி வாரத்தில் தக்காளி திருவிழா நடத்தப்படும் வழக்கம். பல ஆண்டுகளாக இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு ஸ்பெயினின் கிழக்கே. வாலன்சியா நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் புனோல் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா இன்று நடந்தது.
இதில், வெள்ளை நிற உடையில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த திருவிழாவுக்காக நன்றாக விளைந்த, சிவப்பு நிறத்திலான டன் கணக்கிலான தக்காளிகள் லாரிகளில் கொண்டு வந்து தயாராக வைக்கப்பட்டு இருந்தன.
லா டொமேடினா என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பாரம்பரிய திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கென்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் திருவிழாவில் பங்கேற்க திரண்டு வந்திருந்தனர். உள்ளூர் மக்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. பட்டாசு வெடிப்புகளுடன் திருவிழா களைகட்ட தொடங்கியது. இந்த திருவிழாவில், தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.