Offline
Menu
தூக்கு தண்டனைக்கு பதில் விஷ ஊசி செலுத்தலாமா..? சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்
By Administrator
Published on 10/17/2025 09:00
News

புதுடெல்லி,இந்தியாவில் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர செயல்களை அரங்கேற்றிய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சாகும் வரை தூக்கில் இடப்படுகின்றனர். பல்வேறு உலக நாடுகளில் மரண தண்டனை என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விடுவதற்கு பதிலாக, அவர்களுக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி சந்தீப் மெஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்வது என்பது கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும், விஷ ஊசி செலுத்துவது மனிதாபிமானம் உடைய, நாகரீமான முறை என்றும் வாதிடப்பட்டது. எனவே, விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும், அல்லது குற்றவாளிகள் மேற்கண்ட 2 முறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை மட்டுமாவது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் தூக்கு தண்டனை மூலம் மரண தண்டனையை நிறைவேற்றும்போது, உயிர் பிரிவதற்கு அதிகபட்சமாக 40 நிமிடங்கள் வரை ஆகும் எனவும், அதற்கு பதிலாக விஷ ஊசி செலுத்துதல், துப்பாக்கியால் சுடுதல், மின்சாரம் பாய்ச்சுதல் அல்லது விஷவாயு செலுத்துதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி மரண தண்டனையை நிறைவேற்றினால் ஒரு சில நிமிடங்களில் உயிர் பிரிந்து விடும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அமெரிக்காவில் 50-ல் 49 மாகாணங்கள் விஷ ஊசி தண்டனையை பின்பற்றுவதாகவும் கோர்ட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “இங்கு பிரச்சனை என்னவென்றால், அரசாங்கம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தூக்கு தண்டனை என்பது மிகவும் பழமையான நடைமுறை. காலப்போக்கில் நிறைய விஷயங்கள் மாறி வருகின்றன” என்று தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சோனியா மாதுர், மரண தண்டனையை நிறைவேற்றும் முறையை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை குற்றவாளிகளுக்கு வழங்குவது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை வரும் நவம்பர் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments