கர்நாடக மாநிலம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர் மகேந்திர ரெட்டி (31). இவருக்கும் தோல் நோய் நிபுணரான டாக்டர் கிருத்திகா ரெட்டி (28)க்கும் கடந்த வருடம் மே மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கிருத்திகா தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். கணவர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் இது சாதாரண மரணம் என்று கருதப்பட்ட நிலையில், கிருத்திகாவின் சகோதரியும் மருத்துவருமான நிகிதா ரெட்டி மரணத்திற்கான காரணத்தைக் குறித்து ஆராய்ந்தபோதுதான் கொடூரக் கொலை வெளிச்சத்துக்கு வந்தது.
கிருத்திகாவிற்கு நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வந்தது, திருமணத்திற்கு முன்பு இதை மனைவி வீட்டினர் தன்னிடம் மறைத்துவிட்டதாக மகேந்திரா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
மேலும் பெங்களூரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்க மகேந்திரா கிருத்திகாவின் குடும்பத்தினரிடம் பெரும் தொகையைக் கேட்டுள்ளார். ஆனால் கிருத்திகாவின் குடும்பத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இந்நிலையில்தான் பல மாதங்கள் திட்டமிட்டு, மிகவும் சாமர்த்தியமாக மனைவியை மகேந்திரா கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.
கிருத்திகாவின் இரைப்பை குடல் பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மகேந்திரா அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன் வழங்கும் மயக்க மருந்தான Propofol என்ற அனஸ்தீசியாவை அதிக அளவில் வழங்கி உள்ளார். கிருத்திகா மயக்கமடைவதற்கு முந்திய நாள் இரவும் அவருக்கு ஹெவி டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
கிருத்திகா உயிரிழந்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனை தேவையில்லை என்று கூறி, மனைவியின் உடலைத் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல மகேந்திரா வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், கிருத்திகாவின் சகோதரி நிகிதாவின் வேண்டுகோளின் பேரில் போலிஸ் அசாதாரண மரணம் என வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து கிருத்திகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியான பரிசோதனை அறிக்கையில், அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று உறுதியானது.
கிருத்திகாவின் மரணத்திற்குப் பிறகு மிகவும் துயரத்துடன் காணப்பட்ட மகேந்திரா, அடிக்கடி மனைவியின் குடும்பத்தினரைச் சந்தித்து வந்ததால் யாருக்கும் அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வெளியான பரிசோதனை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டாக்டர் மகேந்திரா தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஒன்பது நாட்களுக்குப் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.