கோலாலம்பூர்:
2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில், மாணவர்களின் நற்பண்பு வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக வாரந்தோறும் 1 மணிநேரம் சிறப்பு வகுப்புகள் ஒதுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நற்பண்பு மேம்பாட்டு திட்டம் மாணவர்களிடையே நாகரிகம், மரியாதை, மற்றும் பொறுப்புணர்வு ஆகிய பண்புகளை வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மாணவர்களின் நற்பண்புகளை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முழுமையான முறையில் வளர்க்கும் நோக்கத்துடன் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமைச்சு மேலும் கூறுகையில்,
மழலையர் பள்ளிகளில், நற்பண்பு சார்ந்த கற்றல் தினசரி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கப்படும்.
தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இது வாரத்திற்கு ஒருமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு, இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் சிறு வயதிலிருந்தே நல்லொழுக்கம், ஒத்துழைப்பு மனப்பாங்கு மற்றும் சமூக பொறுப்பை உணரும் குடிமக்களாக உருவாகுவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.