கோத்தா திங்கி: வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 14 வயது மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) பிற்பகல் 3.25 மணியளவில் ஜாலான் ஹிஜாவ் 8, ஃபெல்டா பெங்கேலி திமூர் சந்திப்பில் இந்த விபத்து நடந்ததாக கோத்தா திங்கி OCPD கண்காணிப்பாளர் யூசோப் ஓத்மான் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் இரண்டு மோட்டார் சைக்கிள்களை உள்ளடக்கியது. முதல் மோட்டார் சைக்கிளில் 15 வயது சிறுவனும் 17 வயது பின் அமர்ந்து சென்றவரும் இருந்த வேளையில், மற்றொரு மோட்டார் சைக்கிளில் இரு 14 வயது சிறுவர்கள் இருந்தனர்.
இரண்டாவது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்த வேளையில் மற்றொருவர் காயங்களுக்கு ஆளாகியதாக அவர் கூறினார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் முதல் மோட்டார் சைக்கிளில் இருந்த 15 வயது, 17 வயது சிறுவர்களும் சிறிய காயங்களுக்கு ஆளானார்கள்.
எந்த மாணவர்களிடமும் மோட்டார் சைக்கிள் உரிமங்கள் இல்லை, அந்த நேரத்தில் அவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்பது சோதனைகளில் தெரியவந்தது என்று அவர் கூறினார். இந்த வழக்கு 1987 சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. சாலை பயனர்கள் எப்போதும் போக்குவரத்துச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவும், சாலையில் விழிப்புடன் இருக்கவும் அவர் நினைவூட்டினார்.