கோலாலம்பூர்:
வரவிருக்கும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் தொடர்பான சவால்களை சமாளிக்க ஆசியான் நாடுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவுள்ளதாக மலேசிய தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இந்த உச்சநிலை மாநாடு அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. சமூக ஊடகப் பயன்பாட்டை மேலும் பொறுப்புடன் முன்னெடுக்க தேவையான திட்டங்கள் “கோலாலம்பூர் பிரகடனம்” மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
“கடந்த மே மாதம் புருணைத் தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவானில் தகவல் தொடர்புக்குப் பொறுப்பான அமைச்சர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த கோலாலம்பூர் பிரகடனம் உருவாகியுள்ளது. சமூக ஊடக சவால்களை சமாளிக்க கூட்டு உத்தி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்பதில் அப்போது அனைவரும் ஒருமித்தனர்,” என்று அமைச்சர் மேலும் சொன்னார்.
அவர் மேலும் கூறியதாவது, பரப்பளவும் பங்களிப்பும் வேறுபட்டிருந்தாலும், இணைய வழி மோசடி மற்றும் சூதாட்டம் போன்ற இணைய குற்றச்செயல்கள் அனைத்து ஆசியான் நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களாக உள்ளன.
உச்சநிலை மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாநாடு தொடங்குவதற்கு முன் முழுமையாக நிறைவு செய்யப்படும் எனவும், வரும் அக்டோபர் 22ஆம் தேதி கோலாலம்பூர் மாநாட்டு மையத்துக்கு சென்று தயாரிப்புகள் சுமுகமாக நடைபெறுகின்றனவா என்பதைத் தாமே ஆய்வு செய்வதாகவும் அமைச்சர் ஃபாமி தெரிவித்தார்.