கோலாலம்பூர்:
அம்பாங்கில் உள்ள பெட்ரோன் பாண்டான் இந்தா 1 பெட்ரோல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தகராறில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் லோரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
குறித்த சம்பவம் மாலை 5.15 மணியளவில் நடந்தது என்றும், அப்போது பாதிக்கப்பட்டவர் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தார் என்றும், அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் ஒரு லோரி ஓட்டுநர் வரிசையை மீறி எரிபொருள் நிரப்ப முயன்றதாகவும், அதனைத் தடுத்து நிறுத்திய பாதிக்கப்பட்டவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் வேறு பம்பைப் பயன்படுத்துவதாக விளக்கமளித்தும், பணம் செலுத்திய பின்னர் அந்த லோரி ஓட்டுநர் மீண்டும் அவரை அணுகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“அந்த நேரத்தில், சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரின் மூக்கை தனது விரலால் பிடித்து இழுத்து , பின்னர் அவரது கால்சட்டையிலிருந்து அடையாளம் தெரியாத சிவப்பு நிறப் பொருளை எடுத்து பாதிக்கப்பட்டவரின் மூக்கை நோக்கி குத்தினார். இதனால் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது,” என்று அசாம் கூறினார்.
இதையடுத்து ஏற்பட்ட கைகலப்பில், பாதிக்கப்பட்டவரின் மூக்கிலும் இடது கையிலும் காயங்கள் ஏற்பட்டதுடன், தலையின் பின்புறத்தில் வீக்கம் ஏற்பட்டது. அருகிலிருந்த பொதுமக்கள் தலையிட்டு வாக்குவாதத்தை சமாதானப்படுத்தினர், பின்னர் சந்தேக நபர் தனது லோரியில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக தண்டனைச் சட்டம் பிரிவு 324 (ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு காயப்படுத்துதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம், சவுக்கடி அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம் என்றும் அசாம் தெரிவித்தார்.
பொதுமக்கள் எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாதிருக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.