கோலாலம்பூர்:
பூடி மடானி RON95 (Budi95) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர 300 லிட்டர் பெட்ரோல் மானியம் சாதாரணமாக தனிப்பட்ட பயன்பாட்டிற்கு போதுமானது என நிதி அமைச்சக செயலாளர் ஜெனரல் டத்தோ ஜோஹான் மஹ்மூட் மெரிக்கன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, மலேசியர்களில் 95% பேர் மாதத்திற்கு 180 லிட்டருக்கும் குறைவாகவே பெட்ரோல் பயன்படுத்துகின்றனர் என்றார்.
அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், Budi95 மானிய பெட்ரோலை பெற தகுதி பெற்றவர்களில் 0.1% பேரே தங்களின் 300 லிட்டர் வரம்பை முழுமையாக பயன்படுத்தியுள்ளனர் என்று ஜோஹான் கூறினார்.
இதில் ‘மாதாந்திரம் 300 லிட்டர் என்கின்ற வரம்பை அதிகரிப்பது மானிய எரிபொருள் கசிவு மற்றும் கடத்தல் அபாயத்தை உருவாக்கும்,” எனவும், அதேநேரம் மோட்டார் சைக்கிள் உரிமம் கொண்ட சிலர் தினமும் 500 கி.மீ.க்கும் மேலாக பயணித்தது சந்தேகத்துக்கிடமானதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
BUDI95 திட்டம், கடந்த செப்டம்பர் 27 முதல் செயல்பாட்டில் உள்ளது. 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, MyCard மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள், லிட்டருக்கு RM1.99 விலையில் RON95 பெட்ரோலை பெறலாம்.
இதுவரை 1.2 கோடிக்கும் அதிகமான மலேசியர்கள் இந்த திட்டத்தின் மூலம் எரிபொருள் வாங்கியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
அதே நேரத்தில், இந்த மானியத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் பெறும் சுமார் RM2.5 பில்லியன் சேமிப்பை மக்கள் நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சி செலவுகளுக்கும் திருப்பி விடும் என்று ஜோஹான் கூறினார்.