கோலாலம்பூர்:
மலேசியா 47வது ஆசியான் உச்சிமாநாட்டையும் அதனுடன் தொடர்புடைய சந்திப்புகளையும் நடத்தவுள்ள நிலையில், அக்டோபர் 23 முதல் 28 வரை கோலாலம்பூர் நகர மையத்தில் விரிவான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மாநாட்டு மையம் (KLCC) சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை முன்னிட்டு, அக்டோபர் 26ஆம் தேதி முதல் உலக தலைவர்கள் வருகை தரத் தொடங்குவதால், சாலை மூடல், போக்குவரத்து திசை மாற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டுக்கோப்பாக மேற்கொள்ளப்படும். அத்தோடு முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகரப் பாதைகள் தற்காலிகமாக 30 முதல் 45 நிமிடங்கள் வரை மூடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
மூடப்படவுள்ள முக்கிய சாலைகள் — ஜாலான் அம்பாங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் பி.ரம்லி, பெர்சியாரான் KLCC, ஜாலான் துன் ரசாக், ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் இம்பி, ஜாலான் பார்லிமென் மற்றும் ஜாலான் கூச்சிங் — ஆகியவை உட்பட, KLIA மற்றும் சுபாங் விமான நிலையங்களை நகரத்துடன் இணைக்கும் சில விரைவுச்சாலைகளும் இதில் அடங்கும்.
மாநாடு நடைபெறும் ஆறு நாட்களில் 16,000க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கல்வி அமைச்சகம் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள 102 பள்ளிகள் அக்டோபர் 23 முதல் 29 வரை ஆன்லைன் வகுப்புகளாக (PdPR) மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது.
அதேபோல், பொதுச் சேவைத் துறை 25 கிலோமீட்டர் சுற்றளவில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு Work From Home (WFH) அனுமதி வழங்கியுள்ளது. தனியார் நிறுவனங்களும் நெகிழ்வான பணிநேரத்தை பின்பற்றுமாறு மனிதவள அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.