குவா முசாங்:
தானா பூத்தேயில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் சிக்கிய நிலையில் மயக்கமடைந்த நான்கு வயது சிறுமி, வெப்பத் தாக்கத்தால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
நேற்று மதியம் நடந்த இந்தச் சம்பவத்தில், குழந்தை மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உடனே குவா முசாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பிற்பகல் 3.50 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர் என்று, மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.
“பிரேத பரிசோதனையின் முடிவில், சிறுமி வெப்பத் தாக்கம் (heatstroke) காரணமாக உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
இந்த வழக்கு 2001 குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1)(a) இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, திடீர் மரண வழக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது,” என்றார்.
“சம்பவம் குறித்து எந்தவித ஊகங்களும் வெளியிட வேண்டாம் — இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் எப்போதும் உறுதி செய்ய வேண்டும்,” எனவும் அவர் சொன்னார்.