ஷா ஆலாம்:
மண் ஏற்றிச் சென்ற லோரி மீது கார் மோதியதில் அறுவர் காயமடைந்தனர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இன்று காலை கிள்ளான், ஜாலான் மேரு – காப்பார் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. காலை 9.07 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மீட்புக் குழுவினர் உடனடியாக இடத்திற்கு விரைந்தனர்.
மொத்தம் நான்கு வாகனங்கள் — ஒரு மண் லோரி, ஒரு குப்பை லோரி மற்றும் இரண்டு பெரோடுவா மைவி கார்கள் — இந்த விபத்தில் சம்மந்தப்பட்டிருந்தன.
தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் வாகனங்களில் இருந்து மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு கால் முறிந்ததாக கிள்ளான் வடக்கு காவல்துறை துணை தலைவர், பதில் கண்காணிப்பாளர் முகமட் ரஹிமி ஜைனோல் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக லோரி ஓட்டுநர், 35, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், வழக்கு 1987 சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.