ஜகார்த்தா:
சிறையில் இருக்கும் இரு பிரிட்டிஷ் குடிமக்களை தாயகத்திற்குத் திருப்பியனுப்புவதற்கான ஒப்பந்தத்தில் இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகள் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டன.
இந்த கைதிகளில் ஒருவராக உள்ளவர், லின்சே சேண்டிஃபோர்டு (Lindsay Sandiford). இவர் 2013 ஆம் ஆண்டு ஜனவரியில், பாலி தீவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனைக்கு ஆளானவர் என்று இந்தோனேசிய சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் யுஸ்ரில் இஹ்ஸா மகேந்திரா தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 70 வயதாகும் சேண்டிஃபோர்டு, 2012-ஆம் ஆண்டு தாய்லாந்திலிருந்து பாலிக்கு வந்தபோது, அவரது பயணப்பெட்டியின் அடிப்பகுதியில் 2.14 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், ஒரு போதைப்பொருள் கும்பல் தனது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால், அதைக் கடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார். எனினும், 2013-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மேல்முறையீடு தோல்வியில் முடிந்தது.
அவருடன் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்படுபவர், 35 வயதான ஷஹாட் ஷஹாபாடி (Shahat Shahabadi). இவர் 2014 ஆம் ஆண்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனைக்கு ஆளானவர்.
இரு கைதிகளும் தற்போது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் அவதியுறுகின்றனர், இதனால் அவர்களை பிரிட்டனுக்குத் திருப்ப அனுப்புவதற்கு இந்தோனேசிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.