கோலாலம்பூர்:
மஇகா (MIC), பாரிசான் நேஷனல் (BN)-இல் இருந்து விலகப்போவதாக கூறப்படும் முடிவு, ஒற்றுமை அரசாங்கத்திற்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கும் (PH) ஒரு பேரதிர்ச்சியையும், பேரிழப்பையும் கொடுத்துள்ளதாக மலேசிய மக்கள் உரிமைப் போராட்டக் கட்சியின் (Urimai) தலைவர் பி. இராமசாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, நாட்டின் பாரம்பரிய அரசியல் தூண்களை பலவீனப்படுத்துவதுடன், பல இன ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்த அரசாங்கத்தின் தலைமைத்துவப் பிம்பத்தையும் கேள்விக்குறியாக்குவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அத்துடன், பெரிக்கத்தான் நேஷனல் (PN) கூட்டணி மஇகாவைத் தங்களுடன் இணைக்க முயற்சிக்கும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த அரசியல் நகர்வு ஆருடம் வந்துள்ளது.
இந்த அரசியல் நகர்வானது, மலேசியாவின் தற்போதைய அரசியல் நிலப்பரப்பில் ஸ்திரத்தன்மைக்கும், மக்கள் ஆதரவுக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.