Offline
Menu
பள்ளிகளில் பிரம்படியை கடுமையான வழிகாட்டுதல்களுடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- அன்வார்
By Administrator
Published on 10/24/2025 02:57
News

பள்ளிகளில் பிரம்படியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் அது எந்தவொரு துஷ்பிரயோகத்தையும் தடுக்க கடுமையான வழிகாட்டுதல்களையும் கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருதுகிறார். இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், இன்னும் அரசாங்கக் கொள்கையாக அமல்படுத்தவில்லை என்றும் வலியுறுத்திய அன்வார், கல்வி அமைச்சகம் (MoE) மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (SUHAKAM) உள்ளிட்ட பங்குதாரர்களுடன் விரிவான ஈடுபாட்டின் மூலம் இந்த விஷயத்தை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

பிரம்படியைப் பொறுத்தவரை… நான் குரல் கொடுக்கும் எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், அது மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும். ஆனால் கடுமையான நிபந்தனைகளுடன், பொது பிரம்படியாக அல்ல. பிரம்படி கையில் வழங்கப்படலாம். ஆனால் விருப்பத்திற்கேற்ப அல்ல. நான் ஒரு காலத்தில் ஆசிரியராக இருந்தேன்; நான் கையில் பிரம்பால் அடிப்பேன். ஆனால், நிச்சயமாக துஷ்பிரயோகம் செய்யும் விதத்தில் அல்ல என்று அவர் இன்று மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

கடந்த கால நடைமுறைகளைப் போலவே, மாணவர்களை பிரம்படி அடிப்பதற்கு ஆசிரியர்களின் விருப்புரிமையை அனுமதிக்கும் திட்டம் குறித்து ஆர்.ராயர் (PH-ஜெலுத்தோங்) எழுப்பிய துணை கேள்விக்கு அவர் பதிலளித்தார். சில மனித உரிமைகள் குழுக்கள் பிரம்படி அடிப்பதை ஒரு வகையான குழந்தை துஷ்பிரயோகமாகக் கருதினாலும், பல கல்வியாளர்களும் பெற்றோர்களும் பொறுப்புடன் செயல்படுத்தப்பட்டால் அது பொருத்தமானதாகவே இருக்கும் என்று தான் நம்புவதாக பிரதமர் கூறினார்.

Comments