புதுடெல்லி,டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர்.
இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் மாலை வேளையில் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வேலை முடிந்து பலர் செல்ல கூடிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், சதி வேலையாக இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.