மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று மாலை நவாலே பாலத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
பாலத்தில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை கூறுகையில், சத்தாராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, பிரேக் செயலிழந்ததால் நவாலே பாலத்தின் சரிவில் மாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்தது.
அந்த லாரி வழியில் பல வாகனங்களை மோதியது. இதில் ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைத்து, சேதமடைந்த கார் மற்றும் கண்டெய்னரில் இருந்து சடலங்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் பிரேக் பிடிக்காத லாரி ஒன்று 48 வாகனங்களை இடித்து விபத்தை ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.