Offline
Menu
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்: உமரின் வீடு தகர்ப்பு
By Administrator
Published on 11/15/2025 04:01
News

காஷ்மீர்,டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோனது. எனவே அவர்தான் காரை ஓட்டி வந்தாரா? என சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் அதே சமயம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளில் அவரது உருவம் கண்டறியப்பட்டு, அந்த காரில் அவர் சென்று வந்த இடங்கள் எல்லாம் ஆராயப்பட்டன. இவர்தான் வெடிப்பைச் செய்திருப்பார் என போலீசார் உறுதியாக நம்பினர். இருந்தாலும் டி.என்.ஏ. பரிசோதனையில் அதனை உறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உமர் முகமது ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்தவர். அங்கு அவருடைய தாயார் மற்றும் சகோதரரிடம் டி.என்.ஏ. மாதிரிகள் பெறப்பட்டன. அவை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

கார் வெடித்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட உமரின் உடல் பாகங்கள் என்று சந்தேகம் கொள்ளப்பட்ட பாகங்களுடன் மேற்கண்ட மாதிரிகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இந்த பரிசோதனையில் இரண்டும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்திப்போனது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டது உமருடைய உடல் பாகங்கள்தான் என கண்டறியப்பட்டது.

இதனால் கார் வெடிப்பை நிகழ்த்தியது அவர்தான் என்பது உறுதியானது. பயங்கரவாதியாக அவர் மாறி இருக்கிறார். இதுபற்றி மேலும் விசாரணை தொடர்கிறது.

இதற்கிடையே டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர். இதற்காக உமர் முகமது, முசமில் ஷகீல், ஷாகீத் ஷாகீன் மற்றும் அதீல் அகமது ராதர் ஆகியோர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி உள்ளனர். இது உமர் முகமதுவிடம் கொடுத்து வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த பணத்தில் ரூ.3 லட்சம் மதிப்புக்கு 2 டன் அமோனியம் நைட்ரேட்டை உரக்கடைகளில் வாங்கி உள்ளனர். குருகிராம் மற்றும் நுகு உள்ளிட்ட பகுதிகளில் இது வாங்கப்பட்டு உள்ளது. பணத்தை வைத்திருப்பது தொடர்பாக உமர் அகமதுவுக்கும், முசமிலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்,ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள உமரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் வெடிகுண்டு வைத்து தரைமட்டமாக்கியுள்ளனர். முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது.

Comments