மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவை வலியுறுத்தி அந்நாட்டு அரசு பல கோரிக்கைகளை அடுக்கடுக்காக முன்வைத்துள்ளது.
ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை இந்தியா ஒப்படைக்க வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நட்புக்கு எதிரானது, நீதியை கேலி செய்யக் கூடியது என அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் “இது பாரபட்சமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது, ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என ஷேக் ஹசீனா தீர்ப்பை விமர்சித்துள்ளார்.
இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. அனைவருடனும் நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம்” என சூசகமாக பதிலளித்துள்ளது.
இந்த தீர்ப்பை இந்தியா பொருட்படுத்துவதாக தெரியவில்லை என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். மேலும், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் , அவரை தலைமை ஆட்சியாளராக இந்திய அரசு இதுவரை முழு மனதுடன் அங்கீகரிக்கவில்லை என்பதாலும் ஷேக் ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்பும் சாத்தியங்கள் மிகக்குறைவாகவே உள்ளன எனவும் அவர்கள் கூறுகின்றனர்.